கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் துறைமுகத்துக்குள் சிங்கங்கள் புகுந்து அங்கிருந்தவரைக் கடித்துக் குதறியாக படங்கள் பகிரப்பட்டு வந்தன. இது பலருக்கும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இது சமூக விரோதிகளின் செயல் என்று விளக்கம் அளித்துள்ளது காவல்துறை.
சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் வெளிநாட்டு கண்டெய்னர் வழியாக சிங்கங்கள் வந்தன என்று வாட்ஸ் ஆப் வாயிலாக பரப்பப்படும் செய்தி வெறும் வதந்தியே என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்துக்குள் பெண் சிங்கம் குட்டிகளுடன் நடமாடுகிறது, அங்கே செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, ஒருவர் கூறும் பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்தப் படங்களில் ஒன்றில், கண்டெய்னர் அருகில் சிங்கம் ஒன்று குட்டிகளுடன் நடமாடுவதை, சென்னை காட்டுப்பள்ளித் துறைமுகம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் அது, குஜராத் மாநிலம், பிபாவவ் துறைமுக பகுதியில் கடந்த வாரம் எடுக்கப்பட்டு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில் இடம்பெற்றது என்கின்றனர் காவல் துறையினர்.
துறைமுகத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் இருந்து அடிக்கடி சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் இரை தேடி குட்டிகளுடன் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடந்து நடமாடுகின்றனர். இதனால், அவற்றின் உயிருக்கு ஆபத்து நேர்கிறது என்று செய்தி வெளியிடப் பட்டுள்ளது. சமூக விரோதிகள் இந்தப் படங்களை எடுத்து, சென்னை துறைமுகப் படத்துடன் கலந்து, விபத்தில் அடிப்பட்டு ரத்தக் காயத்துடன் போராடும் இளைஞரின் படத்தையும் சேர்த்து, ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது போல் ஒரு கட்டுக் கதையைப் புனைந்து அனுப்பியுள்ளனர் என்கின்றனர் போலீஸார்.