
சென்னையில் காதலிக்க மறுத்த சிறுமியை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் நித்தியானந்த் (26). இவர் தனது வீட்டின் மேல் தளத்தில் வசித்து வரும் 8ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக அவ்வப்போது மாணவியிடம் காதலை கூறி தொல்லை அளித்து வந்தார். ஆனால் வீட்டு ஓனரின் மகன் என்பதால் சிறுமி யாரிடமும் கூறவில்லை.

இந்நிலையில், வீட்டு மாடியில் தனியாக இருந்த மாணவியிடம் நித்தியானந்த், தனது காதலை கூறியதாக கூறப்படுகிறது. அதனை மாணவி ஏற்க மறுத்துள்ளார். இதனையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு நித்தியானந்த் தப்பிச்சென்றார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோடிய நித்தியானந்தை அமைந்தகரை காவல்துறை தேடி வருகின்றனர். அவர் மீது போக்சோ, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



