
சென்னை:
சென்னையில் கல்லூரி மாணவியின் படத்தை ஆபாசமாகச் சித்திரித்து, அதை வைத்து மிரட்டி ரூ.8 லட்சம் வரை பணம் கறந்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பேஸ்புக்கில் அறிமுகமான இளைஞர், தனது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு, இந்த சதியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சென்னை மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இரு மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் மாணவிக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தனர். அப்போது, அவரது நிர்வாண படம் தங்களிடம் இருப்பதாகவும், குறித்த இடத்திற்கு வரவில்லை என்றால் இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மாணவி, அவரது தாயாரிடம் இதுபற்றித் தெரிவித்தார். இதனால் அச்சமடைந்த மாணவியின் தாயார், அந்த நபர்களைத் தொடர்பு கொண்டு, சந்தித்து தனது மகளின் எதிர்காலத்தை பாழாக்கிவிட வேண்டாம் என கெஞ்சி கேட்டுள்ளார். அப்போது, மாணவி ஒரு இளைஞருடன் இருப்பது போன்ற படத்தைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவரது தாயாரும் பணம் கொடுக்க சம்மதித்தார். இவ்வாறு இரு மாதங்களாக அந்த 3 பேர் கும்பல் ரூ.8 லட்சம் வரை பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அந்த நபர்கள் மூவரும் இறுதியாக ரூ.20 லட்சம் தர வேண்டும் எனவும், அதன் பின்னர் தொந்தரவு செய்யமாட்டோம் என்றும் கூறி மிரட்டியுள்ளது. இதுவரை கொடுத்த பணம் ரூ.8 லட்சமும் மாணவியின் திருமணச் செலவுக்காக வைத்திருந்த சேமிப்பு எனக் கூறி கெஞ்சிய அப்பெண்ணின் தாயார், வேறு வழியின்றி குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் பேரில், மிரட்டல் கும்பலை பிடிக்க போலீசார் மாணவியின் தாயாரை வைத்து பணம் தருவதாக பேச வைத்தனர். அந்த கும்பல் அசோக் நகர் பகுதிக்கு வந்ததும், திட்டமிட்டபடி அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அந்த நபர்களிடம் விசாரணை செய்ததில், பேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலனான அமலேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்த செய்த சதிச் செயல் இது என்பது தெரியவந்தது.
அமலேஷ், கடந்த ஆண்டு மாணவிக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமானவர். கடலூரைச் சேர்ந்த இவர், முதலில் நட்பாகப் பழகினராம். பின்னர் இருவரும் காதலர்கள் ஆகியுள்ளனர். நாளடைவில் அமலேஷின் நடவடிக்கை பிடிக்காததால், இந்த மாணவி அவரிடம் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமலேஷ் தனது நண்பர்களான கோகுல், மைக்கேல், ருத்ரா ஆகியோருடன் சேர்ந்து கொண்டு, மாணவியும், அமலேஷும் சேர்ந்து வெளியில் சென்ற போது எடுத்த புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து அதை வைத்து பணம் பறித்துள்ளார்.
இதை அடுத்து 4 பேர் மீதும் பெண் வன்கொடுமை, மிரட்டல், கூட்டுச் சதி என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குமரன் நகர் போலீசார் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
சினிமா, சின்னத்திரை டிவிக்களின் பாணியில் நடந்த இந்த நிகழ்வு, பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கு ஒரு பாடம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.



