தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சிகள் வார்டு மறுவரையறை நடந்து வருகிறது. அதன் பின்னர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டு மறுவரையறை பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையரும், வார்டு மறுவரையறை ஆணையருமான பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்.
கூட்டத்துக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். வார்டு மறுவரையறை பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடிந்த பின்னர் தேர்தல் நடத்தப்படும்’’ என்றார்.
முன்னதாக அவர் கூட்டத்தில் பேசுகையில், ‘‘மக்கள் எளிமையாக அன்றாடப் பணிகளை மேற்கொள்ளவும், உள்ளாட்சி பிரதிநிதிகளை எளிதில் அணுகி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் வார்டுகள் மறுவரையறை செய்யப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர், உயர் அலுவலர்கள் மூலம் 2 நாட்களுக்குள் கள விசாரணை மேற்கொள்ளப்படும். அப்போது மனு அளித்தவர்களை அழைத்து, நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தப்படும். எனவே மனு அளித்தவர்கள் 2 நாட்கள் அந்தப் பகுதியிலேயே வெளியூர் செல்லாமல் தங்கியிருக்க வேண்டுகிறேன்.
வாக்குச் சாவடிகள் தொடர்பாக கருத்துக்களுக்கு தனி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்றார்.