கோயம்பேடு மூலம் கொரோனா பரவல்! 1589 பேருக்கு பாதிப்பு!

Published:

koyambedu traders2
koyambedu traders2

கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6006 ஆக அதிகரித்தது.

சென்னையில் மட்டும் நேற்று 399 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 3043 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் தெரிவித்த சுகாதாரத் துறை அதிகாரிகள், இன்னும் சில தினங்களில் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தொடும் என்று எச்சரித்தனர். கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது என்று கூறிய அவர்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் எண்ணிக்கை உயர்வதற்கும் கோயம்பேடு மார்க்கெட் தொடர்பு தான் காரணம் என தெரிய வந்துள்ளதாகக் கூறினர்.

தனிமனித இடைவெளி பின்பற்றப்படாததே இதற்குக் காரணம் என்றும், கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புடைய 1300 பேர் சென்னையில் தற்போது தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

இதனிடையே, செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 30 வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. காய்கறி வியாபாரிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

கோயம்பேட்டுக்கு தென்மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் ஏற்றிச் சென்று திரும்பும் வாகனங்களில் ஓட்டுநர், கிளீனர் மட்டுமே இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி கண்காணித்து வந்த போதும், தென்மாவட்டங்களைச் சேர்ந்த சிலர், அந்த வாகனங்களைக் கணக்கு செய்து, தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் திரும்பியிருக்கின்றனர். அவர்கள் மூலமும் தென்மாவட்ட கிராமங்களில் தொற்று பரவியிருப்பது தெரியவந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img