
சென்னை புழல் பகுதியை சேர்ந்த சேர்ந்த குணசுந்தரி என்பவர் பரிமளம் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். குணசுந்தரியின் தம்பி லோகு என்பவர் சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு லோகு இறந்து விட்டார்.
குணசுந்தரியின் அண்ணன் மகனான கணேசன் என்பவரும் அதே கொளத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். கணேசனுக்கு திருமணமான நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. இதனையடுத்து கணேசனுக்கும், சித்தி முறையான லோகுவின் மனைவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.தனது தம்பி மனைவியுடன், அண்ணன் மகன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வரும் விஷயம் அறிந்து அதிர்ச்சி அடைந்த குணசுந்தரி, முறை தவறிய இந்த கள்ளக்காதலை கைவிடும்படி கணேசனை கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரது பழக்கமும் நீடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த குணசுந்தரி, நேற்று கணேசன் வீட்டுக்கு சென்று கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்தார்.

அப்பொழுது அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து அவரின் அத்தையான குணசுந்தரியை சரமாரியாக குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, குணசுந்தரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளி கணேசனை தேடி வருகின்றனர்.