
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசு இணைய தளத்தில் அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரி எதுவும் நீக்கப்படவில்லை எனக் கூறினார்.
நடிகர் கமல ஹாசன், தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் புரையோடிப் போயுள்ளதாகக் கூறினாலும் கூறினார், அவருக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கருத்து மோதல் வளர்ந்து வருகிறது. கமல் ஹாசனுக்கு பதில் அளிப்பதாகக் கருதிக் கொண்டு, அமைச்சர்கள் கமலஹாசனை ஒருமையில் பேசுவதும், திட்டுவதுமாக இயலாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். கமலுக்கு பதில் தெரிவித்த அமைச்சர்கள், ஊழல் பற்றிப் பேசும் கமல்ஹாசன் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றும், அவர் அரசியலுக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்றும் கருத்துகளை உதிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ‘‘இது டிஜிட்டல் யுகம்’’ என்பதால் அமைச்சர்கள் கேட்ட ஆதாரங்களையும், ஊழலால் அனுபவித்த இன்னல்களையும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு தமிழக அரசின் அதிகாரபூர்வ இணைய தளம், இமெயிலுக்கு அனுப்புங்கள்’’ என்று கூறி முகவரியையும் வெளியிட்டார்.
கமல்ஹாசன் எந்த முகவரியையும் தகவல்களையும் கொடுத்தாரோ, அந்த மின்னஞ்சல் முகவரிகள் எதுவும் இல்லாமல் இப்போது அமைச்சர்களின் இணையப் பக்கங்கள் வெற்றிடங்களாகக் காட்சி அளிக்கின்றன. தமிழக அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்தைத் தேடி பலர் ஓய்ந்துவிட்டார்கள். அமைச்சர்களின் தொடர்பு எண், இ-மெயில் முகவரி எதுவும் அகப்படவில்லை. இந்தப் பிரச்னை இப்போது பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்னை குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி எதுவும் நீக்கப்படவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பக்கத்தில் அனைவரின் தொலைபேசி எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் உள்ளன. உறுப்பினர்கள்தானே அமைச்சர்களாக இருக்க முடியும். எனவே மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறு என்று கூறினார்.
இதே போன்றதொரு கேள்வியை எதிர்கொண்டார், சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்த அமைச்சர் சி.வி.சண்முகம். அவரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டனர். அதற்கு அவர், அரசு இணைய தளத்தில் தமிழக அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரி எதுவும் நீக்கப்படவில்லை. மக்கள் தங்கள் புகார்களை மின்னஞ்சலில்தான் அனுப்ப வேண்டும் என்பதில்லை. வாட்ஸ்- அப்பிலும் அனுப்பலாம் என்று கூறினார்.
இப்போதும் தமிழக அரசின் இணையதளத்தில், https://www.tn.gov.in/ministerslist அமைச்சர்கள் பட்டியலில் வெறும் பெயர்களும் துறை குறித்த தகவலும்தான் இருக்கிறது. அந்த அந்த அமைச்சர்களின் பக்கங்களுக்குச் சென்று பார்த்தால், எல்லாம் வெற்றுப் பக்கங்கள்தான்! எடுத்துக்காட்டாக முதலமைச்சர் பக்கத்துக்குச் சென்று பார்த்தால், https://www.tn.gov.in/government/mlas/90511 வெறும் பெயரும் பதவியும், கட்சியின் பெயரும்தான் இருக்கிறது. தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி எதுவும் இல்லை. இதேபோல்தான் அனைத்து அமைச்சர்களின் பக்கங்களும் வெற்றுப் பட்டியல் பக்கங்களாக, தகவல்கள் இல்லாத நிரப்பப் படாத படிவம் போல் காட்சி அளிக்கின்றன. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களின் பக்கத்துக்குச் சென்றால், https://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஏன் இத்தகைய பிரச்னையை அரசு கிளப்பி விட்டுள்ளது என்பது புரியாத புதிர். ஒருவேளை யாரும் நேரடியாக அமைச்சர்களை தொடர்பு கொள்ளக் கூடாது, சுற்றி வளைத்துதான் வர வேண்டும் என்று காட்டிக் கொண்டிருப்பதை, இணையத்திலும் பின்பற்றுகிறார்களோ என்னவோ? தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நாளில், தமிழக அரசு இவ்வாறு இருப்பது மரியாதையைக் குலைக்கும் செயல்தான்! எப்படியோ, கமலஹாசன் துவக்கி வைத்த ஒரு விஷயத்துக்கு இவ்வளவு எதிர்வினைகள் இருக்கிறதே என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



