சென்னையில் காலை முதல் மழை; 1ம் எண் புயல் எச்சரிக்கை: தென்மாவட்டங்களில் கன மழை!

திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை :

சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, அடையாறு,தரமணி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று காலை 11 மணி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரத்திலும் காலை 11 மணிவரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென் மாவட்டங்களில் பகல் 12 மணி வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழையும், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பகல் 12 மணிவரை கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்:

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீனபிடிக்க செல்லவில்லை. தஞ்சை, நாகை, மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீ்றறம் இருப்பதால் அப்பகுதி மீனவர்களும் மீனபிடிக்க செல்லவில்லை.

இந்திய பெருங் கடலில் கன்னியாகுமரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து புயலாக மாறுகிறது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த புயல் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்தால் சென்னையில் மழை குறையும்.

கடல் சீற்றம் இன்றும் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை – பொம்மையார்பாளையத்தில் ஒரு வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. கும்பகோணம் நகரில் காலையில் இருந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.

விருதுநகரில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை 6 மாவட்டங்களுக்கு விடுமுறை

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை.

திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.