
மதுரையில் ஜெராக்ஸ் கடையை வாடகைக்கு எடுத்து கல்லுாரியில் படிக்கும் மகளையே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் தமிழ்ச்செல்வி 42, கைது செய்யப்பட்டார்.
மதுரை வடக்கு மாசி வீதியில் எலுமிச்சை சந்தை பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ்காரர் ஒருவர் வாடிக்கையாளர் போல் சென்று உறுதி செய்தார்.
அங்கிருந்த சின்னசொக்கிக்குளம் சிவக்குமார் மனைவி தமிழ்ச்செல்வி, புரோக்கர் ஞானஸ்கந்தன் கைது செய்யப்பட்டனர். தமிழ்ச்செல்வியின் 20 வயது மகள் மீட்கப்பட்டார்.
போலீசார் கூறியதாவது: பத்து நிமிடத்திற்கு ரூ.23 ஆயிரம் தந்தால் 20 வயது பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என தகவல் கிடைத்தது.
அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தமிழ்ச்செல்வி கூறிய இடத்திற்கு சென்றோம். ஞானஸ்கந்தன் என்பவர் ஒரு சங்க கட்டடத்தின் கடையை வாடகைக்கு எடுத்து ஜெராக்ஸ் நடத்தி வருகிறார்.
அதனருகில் உள்ள அறையை தமிழ்ச்செல்வி விபச்சாரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார். ஞானஸ்கந்தனுக்கு வாடகையாக ஒரு வாடிக்கையாளர் வந்தால் ரூ.3 ஆயிரம் தந்துள்ளார்.
எங்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, அறைக்குள் தமிழ்ச்செல்வி அனுப்பினார்.
அங்கு 20 வயது பெண் இருந்தார். அவர் தனது மகள் என்றும், கல்லுாரியில் படிக்கிறார் என்றும் கூறினார். மகளிடம் விசாரித்ததில், தனது அம்மா பணத்திற்கு ஆசைப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரிவித்தார். இதைதொடர்ந்து அவரை மீட்டோம் என்றனர்.