
சென்னையில் உள்ள புழல் பகுதியை சார்ந்த 22 வயது பெண், அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்த சுதாகர் (வயது 26) என்பவன், ரெட்டேரி பகுதியில் செல்போன் பழுதுபார்க்கும் கடையினை நடத்தி வருகிறான். சுதாகரும் – அந்த பெண் கடந்த 5 வருடமாக காதலித்து வந்ததாக தெரியவருகிறது.
இந்நிலையில், சுதாகரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தால், அவனுடன் கொண்ட காதலை அப்பெண் முறித்துக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகர், பெண்ணின் இல்லத்திற்கு சென்று எதற்காக என்னை காதலிக்க மறுக்கிறாய்? என்று கேள்வி எழுப்பியுள்ளான். மேலும், தன்னை தான் நீ காதலிக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளான்
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், திட்டமிடப்பட்டு எடுத்து செல்லப்பட்ட கத்தியை கொண்டு பெண்ணின் வயிறு, கழுத்து, கை உள்ளிட்ட பகுதியில் குத்தியுள்ளான். இதனால் இரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிய பெண்ணை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்டாண்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் பெண்ணிடம் வாக்குமூலம் கேட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள சுதாகரை புழல் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையிலான காவல் துறையினர் தேடி வருகின்றனர்.