இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மக்களை போட்டு பாடாய்படுத்தி வருகிறது. கொரோனாவை விரட்டுவதற்காக இந்தியாவில் கடந்த ஜனவரி 15-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன. முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகள் பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றை விரட்ட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஒரு தரப்பினர் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், வேறு சிலரோ கொரோனா தடுப்பூசியின் பெயரை கேட்டாலே பதறியடித்து ஓடுகின்றனர்.
தடுப்பூசியை ஏதோ விஷ ஊசி போல் நினைத்து பதறுகின்றனர். தான் ஊசி போடாமல் இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் ”ஊசி போடாதீர்கள்.. விவேக் நிலைமையை பாத்திங்கல்ல” என்று சம்பந்தமே இல்லாமல் வதந்தியை கிளப்பி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நபர்களின் முகத்தில் ‘பளார்’ என்று அறைந்து தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர வைத்துள்ளார் கோவையை சேர்ந்த ஒரு முதியவர். கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனியில் வசிக்கும் ஜெகநாதன் (76) என்பவர்தான் அந்த முதியவர். ஜெகநாதனும், அவரது மனைவியுமான விஜயலட்சுமியும் (69) தடுப்பூசி போட்டுக் கொள்ள முடிவு செய்தனர். ஜெகநாதன் விரும்பியபடி காரில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.
ஆனால் கொஞ்சம் கூட நடக்க முடியாத நிலையில் இருக்கும் விஜயலட்சுமி துடியலூர் அரசு மருத்துவமனையின் தடுப்பூசி மையத்துக்கு செல்வது இயலாத காரியம். ஆனால் மனைவியும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார் ஜெகநாதன்.
இதனால் மனைவியை இரு கைகளாலும் தூக்கி சுமந்து சென்று காரில் அமர வைத்தார். பின்பு அரசு மருத்துவமனைக்கு முன்பு காரை நிறுத்தி விட்டு, மனைவியை அப்படியே சுமந்து கொண்டு தடுப்பூசி மையத்துக்கு சென்றார்.
பின்னர் இருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு திருப்தியுடன் காரில் வீட்டுக்கு திரும்பி சென்றனர். தடுப்பூசி முக்கியத்துவத்தை கருதி தள்ளாத வயதிலும் முதியவர் ஜெகநாதன் செய்த செயல் தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புபவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது.
முதியவரின் செயலால் நெகிழ்ச்சி அடைந்த பலரும் அவரை பாராட்டு மழையில் நனைய வைத்து வருகின்றனர்.