கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் 4 லட்சத்தை கடந்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு, ஒரு கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது
இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்தி நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 52. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், 2003 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வந்தார். இந்தியில் வெளியான பேஜ் 3, கார்பரேட், கியா லவ் ஸ்டோரி ஹே, ராக்கெட் சிங் உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
தமிழில், சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் சமந்தாவின் தந்தையாக நடித்திருந்தார். ஏராளமான இந்தி தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். இந்தி திரையுலகினர் அவர் மறைவுக்கு சமூக வலை தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.