இந்தியாவில் கொரோனா பரவல் உக்கிரமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
மிகவும் கோரமாக தாக்கி வருவதை இதிலிருந்தே விளங்கி கொள்ளலாம். மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
ஏற்கெனவே நாடு தழுவிய ஊரடங்கால் பொருளாதாரம் பெருமளவு சரிந்துள்ளது. பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இச்சூழலில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு தீர்வாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கினால் நாட்டின் வளர்ச்சி எப்படி வளரும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறுவது
புகழ்பெற்ற தடுப்பூசி ஆய்வாளர் தெக்கேகரா ஜேக்கப் ஜான் ஹெச்ஐவி தொற்றையும் கொரோனா தொற்றையும் ஒப்பிட்டு இதற்கான விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஹெச்ஐவி தொற்று வந்தால் என்ன செய்தோம்? உடலுறவே வைக்கக் கூடாது என்று சொல்வோமா? அல்லது பாதுகாப்பாக உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வோமா? அதாவது ஆணுறையுடன் கூடிய உடலுறவை சொல்கிறேன். மக்கள் நிறைய தூண்டுதல்களுக்குப் பிறகு ஆணுறை அணிந்தனர். அதேபோல கொரோனாவை தடுக்க முகக்கவசம் ஒன்றே தீர்வு. ஊரடங்கு ஒரு தீர்வல்ல.
கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது ஊரடங்கு போடப்பட்டதிலேயே எனக்கு உடன்பாடு இல்லை. மக்களைத் தனிமைப்படுத்தினால் மனநல பிரச்சினை உருவாகும் வாய்ப்பிருக்கிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு. சமூகத்துடன் உறவாடாமல் மனிதனால் வாழ முடியாது. மக்களால் பின்பற்ற முடியாத ஊரடங்கு நடைமுறையை நாம் ஏன் கையில் எடுக்க வேண்டும். அதை விடுத்து முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதுமே” என்றார்.
பேராசிரியரும் நுண்ணுயிரியல் துறை நிபுணருமான வசந்தபுரம் ரவி கூறுகையில், “நாடு தழுவிய முழு ஊரடங்கு என்பது நிரந்தர தீர்வல்ல.
அது நடைமுறைக்கு ஆகாத காரியம். நாம் அழுத்தம் கொடுப்பதால் மக்களின் பழக்கவழக்கங்கள் மாறாது. ஹெச்ஐவி தொற்று அதிகம் இருந்த காலத்தில் மக்கள் ஆணுறை அணிய மறுத்தனர். இப்போது முகக்கவசம் அணிய மறுக்கிறார்கள். மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அவர்களிடம் உடலுறவே வைக்க கூடாது என சொல்வதைக் காட்டிலும் ஆணுறை அணிந்து பாதுகாப்பான உடலுறவு கொள்ளுங்கள் என்று சொன்னால் புரிந்துகொள்வார்கள்.
அதுபோல முகக்கவசம் அணிவதையும் வலியுறுத்த வேண்டும். தொற்று பரவலைக் குறைக்க தேவையான கட்டுப்பாடுகள் அவசியம் தான். ஏனென்றால் சாலையில் வேகமாகச் செல்லும் வாகனம் வேகத்தடை வரும்போது மெதுவாகச் செல்லும். அதேபோல சில கட்டுப்பாடுகளை விதித்தால் பரவலின் வேகம் குறையலாம். மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் தடுப்பூசி போடுவதே ஒரே தீர்வு” என்றார்.
மற்றொரு நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளரான ராமசாமி பிச்சையப்பன் பேசுகையில், “கொரோனாவுக்கு எதிராக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் போன்ற பழக்கவழக்கங்களை மக்களிடம் வலியுறுத்த வேண்டும். அதை விடுத்து ஊரடங்கு போடுவது தொற்று பரவலைத் தடுக்காது. இருப்பினும், காரணத்துடன் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஊரடங்கு என்பது பொருளாதாரத்திற்கு பேரழிவாக அமையும். பொருளாதாரத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்” என்றார்.