கொரோனா: வாழ்வென்றால் போராடும் போர்களமே.. மாற்றுத்திறனாளி பாடகர் கோமகன் உயிரிழப்பு!

Published:

komakan
komakan

ஆட்டோகிராஃப் படத்தின் மூலம் பிரபலமான பாடகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

ஆட்டோகிராப் படத்தில் நடித்த கோமகன் கொரோனோவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் இவர் ஆட்டோகிராப் படத்தில், ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் இதனை எழுதி, இயக்கி, தயாரித்ததுடன் நடிக்கவும் நடித்தார்.

இப்படம் வணிக நோக்கில் பெருவெற்றி பெற்றதுடன் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றது.

பாடகர் கோமகன் பாடல் இன்றைய காலகட்டத்திலும் அனைவராலும் ரசிக்கப்படும் பாடலாக இருந்து வருகிறது.

பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்திருந்தது. இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் உணர்வுப்பூர்வமாகப் ஓரிரு வார்த்தைகள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன். கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்திருந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட ஆர்கெஸ்ட்ராவை வைத்திருந்த கோமகன் கடந்த ஆண்டு பரவிய கொரோனாவால் மேடை நிகழ்ச்சிகள் கிடைக்காமல் தனது குழுவோடு பாதிக்கப்பட்டிருந்தார். இயக்குநர் சேரனும் அப்போது அவர்களின் நிலைகுறித்து கேட்டறிந்தார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்நிலையில், 50 சதவீத கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் கோமகன் கடந்த 12 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்பு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள ஐ.சி.எஃப் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்தார். மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராகவும் கோமகன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் தங்களுடைய இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img