
ட்விட்டரில் தனது பெயரில் யாரோ போலி கணக்கு தொடங்கி, முதல்வர் மீது அவதூறு கருத்து தெரிவித்திருப்பதாக நடிகர் செந்தில் காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
திரை பிரபலங்கள் பெயரில் ட்விட்டர், பேஸ்புக்கில் போலி கணக்குத் தொடங்குவது அதிகரித்திருக்கிறது. தனது பெயரில் போலி கணக்கு தொடங்கியிருப்பதாக நடிகர் சார்லி சில தினங்களுக்கு முன்னர் புகார் தந்தார். அதற்குள் அடுத்த புகார்.
இது நகைச்சுவை நடிகர் செந்திலிடமிருந்து வந்திருக்கிறது. ஜெயலலிதா இருந்த காலத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்துள்ளார். தற்போது பிஜேபியில் இணைந்துள்ளார். அவர் பெயரில் ட்விட்டரில் கணக்குத் தொடங்கி டாஸ்மாக் குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் கமெண்ட் போட்டிருக்கிறார்கள்.
பதறிப்போனவர் உடனே காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
“நான் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக நடித்து கொண்டு இருக்கிறேன். ஜூன் 12-ம் தேதியன்று எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ சில விஷக்கிருமிகள் நான் பதிவு செய்தது போல் தமிழக அரசின் மீதும், தமிழக முதல்வர் மீதும் அவதூறான கருத்துக்களை ட்விட்டரில் போலியாக பதிவிட்டுள்ளார்கள்.
ஆகவே இவ்விசயத்தில் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலியான பதிவுகளை பதிவு செய்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி எனது போலியான பெயரில் வெளியான டுவிட்டர் பதிவை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என தனது புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனு அளித்தபின் பத்திரிகையாளர்களை சந்தித்தவர்,. நகைச்சுவையாக எனக்கு சாதாரண கணக்கே தெரியாது, இதில் ட்விட்டர் கணக்கெல்லாம் எப்படித் தெரியும் என்றார் .