
மதுரையில் நிறுவனம் நடத்தி பணம் இரட்டிப்பு ஆசைகாட்டி 150 பேரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த திண்டுக்கல் சையது பாரூக் 29, உட்பட மூவரை போலீசார் தேடுகின்றனர்.
மதுரை பைபாஸ் ரோட்டில் ப்ளை வேர்ல்ட் ஷேர்ஸ் பி.லிட்., என்ற பெயரில் கடந்தாண்டு மே மாதம் சையது பாரூக் மோசடி நிறுவனத்தை ஆரம்பித்தார். பங்கு சந்தையில் முதலீடு செய்ய உள்ளதாக கூறி வாட்ஸ் ஆப் குரூப்பில் தகவலை ‘கசிய’விட, படித்தவர்கள், பணம் இருப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்தனர்.
அங்கு நிர்வாக இயக்குனராக இருந்த ஆனந்தி மணிகண்டன் , ரூ.10 ஆயிரம் கொடுத்தால் ரூ.20 ஆயிரம், ரூ.ஒரு லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவோம்’ என ஆசையை துாண்ட, பணம் கொட்டியது.
ஆட்களை சேர்த்துவிட்டவர்களுக்கு கமிஷன் கரெக்டாக கொடுக்க, ஆளாளுக்கு ஆள் பிடிக்க ஆரம்பித்தனர்.
இந்தாண்டு மார்ச் வரை கமிஷன் கொடுத்தவர்கள், அதன் பிறகு நிறுவனத்தை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
பணம் போட்டவர்கள் ‘பித்து’ பிடித்தவர்கள் போல் போலீசிற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 150 பேர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்டது திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் புகாரின் அடிப்படையில் ரூ.3 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. சையது பாரூக், ஆனந்தி மணிகண்டன், ஊழியர் திண்டுக்கல் மனோஜ்குமார் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவாக உள்ள மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் (0452 – 264 2161) புகார் தெரிவிக்கலாம்.