
சென்னை சூளைமேட்டில் ஓடும் காரில் தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை முகப்பேர் பகுதியை சோந்தவர் சில்பியா (54). இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை காரில் புறப்பட்டார்.
வடபழனி 100 அடி சாலை, சூளைமேடு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதைப் பார்த்து அதிா்ச்சி அடைந்த சில்பியா சாலையின் ஓரம் காரை நிறுத்தி விட்டு, அதில் இருந்து வெளியேறினார். அதற்குள் தீ வேகமாக கார் முழுவதும் பரவி, கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதைப் பார்த்த பொதுமக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரா்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்து குறித்து சூளைமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தினால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பு ஏற்பட்டது.