சென்னையில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை நோக்கி வரும் ரயில்கள் வருகை தாமதம் ஆனது.
சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 4.40 மணியளவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து வெளியூர்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் என்ன நடந்தது என புரியாமல் விழித்தனர்.
பின்னர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டன. இதை தொடர்ந்து சென்னை நோக்கி வரும் ரயில்களுக்கு அனுமதி தரப்பட்டது. சில ரயில்கள் மாற்று தண்டவாளம் வழியாக இயக்க அனுமதிக்கப்பட்டன.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விரிசல் காரணமாக ரயில் போக்குவரத்தில் கால தாமதம் ஏற்பட்டது. ஆனால் செங்கல்பட்டு, சென்னை கடற்கரை இடையேயான ரயில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை.