
66 வயதான ஶ்ரீதரன் என்ற நபர், சென்னை பள்ளிக்கரணை வ.ஊ.சி தெரு சிண்டிகேட் பேங்க் காலனியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் வசித்து வருகிறார்.
இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டில் உள்ள ஏசியில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு, இறந்து போன எலி ஒன்று திடீரென இவரது கட்டிலில் விழுந்துள்ளது.
இதனை பார்த்த ஶ்ரீதரன் ஏசிக்குள் வேறு ஏதும் எலி உள்ளதா என்று பார்ப்பதற்காக ஏசியின் உள்ளே கையை விட்டு பார்த்துள்ளார்.

அப்போது உள்ளே ஏதோ தென்பட, அது மின்சார வயர் என்று கையை வைத்து இழுத்துள்ளார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக, உள்ளே இருந்த கொடிய விஷம் வாய்ந்த நல்லபாம்பு அவரது கையின் 2 விரலில் கொத்தியுள்ளது.
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அனுமதிக்க மறுத்ததால் அவரை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், மாலை 4.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்ட பின்னர் உடலை குரோம்பபேட்டை அர மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், தீயணைப்பு துறையினர் ஶ்ரீதரனை கடித்த நல்லபாம்பை பிடித்துச்சென்றனர்.