
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் குடோன் தரைமட்டமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டியில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான கணபதி என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி பணிகள் நடைபெற்ற நிலையில் பட்டாசு சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்பு குடோனில் இன்று அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது.
குடோன் முழுவதும் தரைமட்டமான நிலையில் சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தொழிலாளர்கள் பணிக்கு வரும் முன்பு விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் குடோனில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்து சேதமானது. விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





