
எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காட்டுகிறது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. 11 சுற்றுகள் முடிவில் 83,528 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 11 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்ற வாக்குகள் 32,360 ஆகும். அதிமுக வேட்பாளரைவிட 51 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார்.
கிட்டத்தட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதியாகியுள்ளது. இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து திமுக கூட்டணி கொண்டாடி வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காட்டுகிறது. நாளை நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கதிதான். கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் தோற்றது 8904 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே.
அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி செயல்பாட்டால் சோர்வடைந்துள்ளனர். ஓபிஎஸ் இல்லாமல் அதிமுக இல்லை; ஓபிஎஸ் இல்லாவிட்டால் ஒரு வெற்றி கூட பெற முடியாது. தற்போதாவது உண்மை நிலவரத்தை பழனிசாமி தெரிவித்துக்கொள்ள வேண்டும் என்று ஓபன்னீர்செல்வம் தரப்பு விமர்சனம் செய்தது.
டெபாசிட்டை இழக்கும் நிலைக்கு வரும் என்று அன்றே சொன்னேன். எடப்பாடி பழனிச்சாமி பேசியதை ஈரோடு மக்கள் ரசிக்கவில்லை. தோல்வியில் துவண்டு போயிருக்கிற அதிமுக தொண்டர்கள் கண்ணில் கண்ணீர் வருகிறது. ஓ.பன்னீர்செல்வதை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச வேண்டும் எனவும் புகழேந்தி வலியுறுத்தினார்.





