திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், பண்பொழியில் அமைந்துள்ளது திருமலைக் கோவில். திருமலைக்குமாரசுவாமி திருக்கோவில் அமைந்த அழகிய மலைக் கோவில்.
நெல்லை மாவட்டத்தின் மிகப் பெரிய முருகன் கோவிலாகத் திகழ்கிறது இந்தக் கோவில். அருணகிரி நாதரால் பாடப்பெற்ற மிக முக்கியத் தலம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்.
தனி உதவி ஆணையரின் கீழ் செயல்படும் இக்கோவிலில் முருகனுக்கு உரிய விசேஷ தினங்களான தை பூசத்திருநாள், மாசித் திருநாள் 10 நாட்கள், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம், கார்த்திகைத் திருநாள் உள்ளிட்ட அனைத்து சிறப்பான விழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இந் நாட்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே திருமலைக் குமார சுவாமியை தரிசிக்க வருகின்றனர்.
இருப்பினும், இந்தக் கோயிலில் பணியாளர் பற்றாகுறை நீடிக்கிறது. அதற்குக் காரணம், அறநிலையத்துறையின் மெத்தனப் போக்கே! கடந்த 12 ஆண்டுகளாக பணி நிறைவு பெற்ற ஊழியர்களுக்குப் பதிலாக இது வரை புதிய நபர்களை நியமிக்கவில்லை. தற்போது 25 க்கும் மேற்பட்ட பணி இடங்கள் காலியாக உள்ளன.
இதனால் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக 4 அர்ச்சகர்களில் 3 பேர் ஓய்வு பெற்று விட்டனர். இருப்பவர் ஒருவர் மட்டுமே. மடப்பள்ளியில் இறைவனுக்கு நிவேதனம் செய்வதற்கு, நியமனம் செய்யப்பட வேண்டிய மூவரில் ஒருவர்தான் இப்போது உள்ளார்.
வாத்தியம். நாகஸ்வரம் 4பேர்க்கு 2பேரே உள்ளார்கள். திருவாசகம் படிக்க ஓதுவார் ஒருவர் கூட இல்லை. காவல் துப்புரவு பணியாளர் உட்பட பல பணியாளர்கள் இல்லை.
இதுதான் இன்றைய திருமலைக் கோவிலின் நிலை. கோவிலுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை முறையாக வரி வசூல் செய்ய அலுவலகத்திலும் ஆட்கள் இல்லை. தகுந்த அதிகாரிகள் தகுந்த முறையில் தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கோவிலின் பழைமைச் சிறப்பையும் தொன்மையையும் மீட்டெடுக்க முடியும்.
இதனிடையே, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அறநிலையத்துறையில் இருந்து பணி ஓய்வுக்கான பண பலன்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இதை அடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுவிட்டு, ஒவ்வொரு முறையும் திருநெல்வேலிக்கு அலையாய் அலைகின்றனர். கடந்த மாதம் நெல்லைக்கு இந்த வழக்கு தொடர்பாக வேன் வைத்துக் கொண்டு முன்னாள் பணியாளர்கள் சென்றிருந்தனர். ஆனால், அன்றைய தினம் நீதிபதி விடுப்பில் உள்ளார் என்று கூறி, மீண்டும் விசாரணையை பின்னொரு நாளில் வரும்போது சொல்கிறோம் என்று கூறி விட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் புலம்பிக் கொண்டே பண்பொழி வந்து சேர்ந்தார்கள்.
ஆலயத்துக்கு சிறப்பு தரிசனம், கடை வாடகை, மலைக் கோவில் பாதை கட்டணம், என்று கண்ணுக்குத் தெரிந்து வருவாய் இருக்கும் போது, மலைக் கோவிலையும், மலைக்கோவிலைச் சார்ந்த கீழ்க் கோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட சுற்றுக் கோவில்களையும் மோசமான நிலையில் அறநிலையத் துறை அதிகாரிகள் வைத்திருப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இப்படி அறநிலையத்துறையின் ஒட்டு மொத்த புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கும் தன் கோவிலையும், பணியாளர்களின் நலனையும் அந்த முருகன் தான் மீட்டெடுத்துக் கொள்ள வேண்டுமோ என்னவோ என்று வெளிப்படையாக குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள். அப்படி என்றால் திருமலைக் கோவில் முருகனுக்கு விடிவு காலம் பிறக்குமா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது!