சென்னை:
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தியை ராமேஸ்வரம் கடலில் கரைப்்பதற்காக அவரது கணவர் போனி கபூர் தனது மகள்களுடன் சென்னை வந்தார் என்றும் பின்னர் அவர்கள் ராமேஸ்வரம் நோக்கிச் செல்வதாகவும் செய்திகள் பரவின. ஆனால் அவர்கள் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வங்கக் கடலில் அஸ்தியைக் கரைத்தனர்.
உறவினர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க துபை சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த சனிக்கிழமை எதிர்பாராத விதமாக குளியல் அறை பாத் டப்பில் மயங்கிய நிலையில் உயிரிழந்தார். பின்னர் பிப்ரவரி 28 அன்று இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்ட அவரது உடல் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப் பட்டது. பின்னர், ஸ்ரீதேவியின் உடலுக்கு மார்ச் 1 அன்று இறுதிச் சடங்குகள் நடத்தப் பட்டு, முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது..
தமிழகத்தின் சிவகாசியில் பிறந்து வளர்ந்த நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி, தமிழ்நாட்டின் கடற்பகுதியில் கரைக்கப்பட்டது.