சென்னை:
சிறுவனை ஆபாசமாக திட்டியதாக தனியார் டிவி தொகுப்பாளினி மீது புகார் எழுந்துள்ளது. தனியார் டிவி தொகுப்பாளினி, சிறுவனை ஆபாசமாக திட்டியதாக அவர் மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை பாரிமுனை அருகே காரில் வந்த போது, மற்றொரு காரில் வந்த தம்பதியுடன் ஏற்பட்ட தகராறில், தம்பதியுடன் வந்த அவர்களது 11 வயது மகனை ஆபாசமாக திட்டினாராம். இது குறித்து பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதே போல் அந்தத் தொகுப்பாளினியும் சிறுவனின் பெற்றோர் மீது புகார் அளித்துள்ளாராம். ஆனால் காவல் நிலையத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
முன்னதாக, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் குறித்த விவாதத்தில், தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் அடித்தது சர்ச்சைக்கு உள்ளாயினர்.
கே.வி.ஆனந்த் இயக்கும் ‘சூர்யா 37’ படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார் எனப்படுகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அமிதாப் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடந்ததாம். இதை வைத்து அத் தொலைக்காட்சியின் கிசுகிசு நிகழ்ச்சியில் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து பேசினர். “அனுஷ்காவுக்காவது ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு… அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னுதான் அவர் பேசணும்” என உயரத்தை கிண்டல் செய்தனர்.
இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து, நிகழ்ச்சி ஒளிபரப்பான சன் டி.வி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். சூர்யாவை தரம் தாழ்ந்து விமர்சித்ததைக் கண்டித்து போஸ்டர்களையும், பேனர்களையும் கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர்.
அந்தத் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் மீண்டும் இன்று சிறுவனை ஆபாசமாகத் திட்டியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.



