சென்னை:
ஆளுநர் வாகனம் செல்கிறது, முதல்வர் கார் போகிறது என்று கூறி வெகு நேரம் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது, பத்து நிமிடம்தான் போக்குவரத்தை நிறுத்தலாம் என்று சில நடைமுறைகளை வகுத்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக கூறியிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. வழக்கறிஞர் துரைசாமி தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவசர வேலையாக வெளியே சென்றிருந்தபோது பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதற்கு முதல்வர் கோட்டைக்குச் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மருத்துவமனை செல்பவர்கள் உள்ளிட்டோர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே இத்தகைய சிக்கலை உருவாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப் பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்த விவகாரத்தில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறி, இது தொடர்பான நடைமுறைகளை வகுத்து ஓர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஆளுநர், முதல்வர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரின் வாகனங்கள் செல்வதாக இருந்தால் அதிக பட்சம் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரையே போக்குவரத்தை நிறுத்தலாம், இந்த விதிமுறை பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு பொருந்தாது என்று கூறப்பட்டிருந்தது.



