மதுரை:
மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தாவை வெளியேற்றி தாம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை; புதிதாக இளைய மடாதிபதியை நியமிக்க வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்.
மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைவதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. மதுரை ஆதீன நிர்வாகத்துக்கு உட்பட்ட கோயில்களிலும் நித்யானந்தா நுழைவதற்கு நீதிமன்றத் தடை உள்ளது.
முன்னதாக, மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை 27.4.2012 அன்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்தார். இதற்கான பட்டாபிஷேக விழாவெல்லாம் அப்போது தடபுடலாக நடந்தது. அந்த நேரத்தில், தான் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட வேண்டி, பெரும் தொகையை நித்யானந்தா மதுரை ஆதீனத்துக்கு வழங்கினார் என்றெல்லாம் செய்திகள் பரவின.
ஆனால், அடுத்த நில நாட்களிலேயே அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட, அதைக் காரணமாக வைத்து, தனது உத்தரவை மதிக்காத இளைய ஆதீனத்தை, அந்தப் பொறுப்பில் இருந்து நீக்குவதாக, அதாவது நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்ததை ரத்து செய்வதாக அதே ஆண்டு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அறிவித்தார். பின்னர் 21.4.2016 அன்று இளைய ஆதீனமாக சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை அருணகிரிநாதர் நியமித்தார். ஆனால் இதுவும் பிரச்னைக்கு உள்ளானது. இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார்.

அப்போது அவர், ஒருவர்தான் இளைய ஆதீனமாக நியமிக்கப் பட முடியும் என்று கூறியிருந்தார். ஆனால், தொடர்ந்து எழுந்த பிரச்னைகளில் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தா தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரையை சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரை ஆதீனத்துக்குள் செல்ல நித்யானந்தாவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அப்போது நித்யானந்தா சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில், ‘நான் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி. 2012-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டேன். ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் இளைய ஆதீனமாகவே தொடர்வார். அந்த நியமனத்தை எவராலும் ரத்து செய்ய முடியாது’ என்று கூறியிருந்தார்.
ஆனால், அவரது இந்த பதில் மனுவில், 293-வது ஆதீனம் என்று குறிப்பிட்டதை திரும்ப பெற்றுக்கொண்டு, புதிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 292-வது ஆதீனம் இருக்கும் போது, 293-வது ஆதீனம் என்று எப்படி நித்யானந்தா தன்னைத் தானே குறிப்பிட்டுக் கொள்ள முடியும்? என்றும் கேள்வி கேட்டது. மேலும், சட்ட விரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை ஆதீனம் மடத்தின் 293 வது மடாதிபதியாகப் பிரகடனப் படுத்திக் கொண்டார் என்றும், ஆதீன மடத்துக்குள் நுழையவும், அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்குத் தடை விதிக்கவும், நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தைப் பாதுகாக்கவும் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள் கிழமை இன்று இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருணகிரிநாதர், மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய தாம் தடை விதித்ததில் எந்த மாற்றமும் இல்லை. ஆதினத்தின் கட்டளைக்கு கீழ்படியாதவர்கள் மடத்தை விட்டு வெளியேறித்தான் ஆக வேண்டும். இப்போதைக்கு ஆதின மடத்திற்கு புதிய வாரிசு நியமிக்கப்படவேண்டிய அவசியமில்லை. சிவபக்தி நிறைந்த, சைவ சித்தாந்தங்கள் படித்த பண்டிதர், சிவனைப் பற்றி அறிந்தவர் வாரிசாக நியமனம் செய்யப்படுவார், அதற்கான நேரம் வரும் போது தேர்ந்தெடுத்து பட்டம் கட்டுவோம் என்று கூறினார் அருணகிரிநாதர்.
மதுரை ஆதீன மடம் திருஞான சம்பந்தர் பெயரில் தமிழ் வளர்த்த மடம், சைவம் தழைக்கப் பாடுபட்ட பெரியோர்கள் இருந்த மடம், இன்று தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் பக்தர்களின் மன வேதனை!



