சென்னை:
தீவிர அரசியலில் குதிக்கப் போவதாகக் கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது முதல் அரசியல் நிகழ்வில் பங்கேற்றார். வெள்ளை உடையில் தோற்றம் தந்து தனது ஆன்மிக அரசியல் நிகழ்வில் பங்கேற்றார் ரஜினி.
ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்ததை அடுத்து, மக்கள் மன்றம் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் முதல் கட்டமாக, நிர்வாகிகளை நியமித்து வரும் அவர், விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை இன்று ரஜினிகாந்த் திறந்து வைத்தார். தீவிர அரசியல் அறிவிப்புக்குப் பின், ரஜினி பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது.
ஆன்மிக அரசியல் என்ற முழக்கத்தை முன் வைத்த ரஜினி, அதன் வெளிப்பாடாக அமைந்த வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் மேடை ஏறி, தனது அரசியல் அச்சாரத்தைப் பதித்தார்.
ரஜினி காந்த் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்காக, கோயம்பேட்டிலிருந்து விழா நடைபெறும் இடம் வரை வழி நெடுகிலும் பேனர்கள், கட்-அவுட்கள் வைத்திருந்தனர். வழி எங்கும் திரண்டிருந்த ரசிகர்கள், பலத்த ஆரவாரத்துடன் ரஜினியை வரவேற்றனர்.
விழா நடைபெறும் இடத்துக்கு அதே பரபரப்பு குறையாமல் வந்து, எம்.ஜி.ஆரின் புகைப்படத்தைத் திறந்துவைத்தார் ரஜினி. பிரபு, விஜயகுமார், பி.வாசு, லதா உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட அரசியல் பின்னணி கொண்டோரும் விழாவில் பங்கேற்றனர்.
ரஜினிகாந்த் அரசியல் சார்ந்த பொது நிகழ்ச்சியில் முதன்முறையாக இன்று கலந்து கொள்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மாணவர்களிடையே பேசவிருக்கிறார் ரஜினி. மேலும் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்.

இந்தப் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் முன்னாள் அதிமுக எம்.பி.யும் புதிய நீதிக்கட்சியை நடத்தியவருமான ஏ.சி சண்முகம். கடந்த வாரம் ரஜினிக்கு இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்வி நிறுவனம் மற்றும் ரஜினி ரசிகர்கள் இணைந்து மிகப் பெரிய அளவில் ரஜினியை வரவேற்கும் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.
இதற்காக வைக்கப் பட்ட பேனரில், தர்மத்தின் தலைவனே வருக ! தமிழகத்தின் எதிர்காலமே ! எங்கள் காலாவே, எங்கள் வாழ்வே! நடத்துனராக இருந்து சிஸ்டத்தை மாற்ற வரும் ‘காலா’-வே வருக ! என்றெல்லாம் சூட்டைக் கிளப்பியிருந்தனர்.



