
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது திமுக., செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான சட்டப் போராட்டத்தை நடத்தியுள்ளது என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது, முதல்வர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்துக்கு திமுக முழு ஆதரவு என்றார்.
இதனிடையே, திமுக வினர் கூச்சல் எழுப்பினர். காவிரி விவகாரத்தில் திமுக செயல்பாடுகள் குறித்து முதல்வர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த காலங்களைப் போலவே மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
மேலும், காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு கோரி மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் தந்தவர் ஜெயலலிதா என்று கூறிய முதல்வர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளை பேரவையில் பட்டியலிட்டார். சென்னை வந்த பிரதமரிடம், அனைத்து கட்சி தீர்மானத்தை விளக்கி கோரிக்கை வைத்தோம் என்று கூறினார் முதல்வர்.
காவிரி விவகாரம் டெல்டா விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் பிரச்சனையாக உள்ளது என்று கூறிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியத்திற்காக அனைத்து தி.மு.க எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யத் தயார் என்றார்.
அனைத்து கட்சி தலைவர்களை பிரதமர் சந்திக்காதது ஜனநாயகத்தின் நெருக்காடியான தருணமாகும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலம் கடத்தாமல் அமைக்க வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு தமிழக மக்களின் கோபத்திற்கு உள்ளாகும். தமிழகத்திற்கு முழுமையான நீரை கர்நாடக எந்த ஆண்டும் வழங்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்திற்காக அனைத்து தி.மு.க எம்.எல் ஏ.க்களும் ராஜினாமா செய்யத்தயார் என்று ஆவேசமாகக் கூறினார் அவர்.
ஒருவர் மீது ஒருவர் குறை கூற இது நேரமல்ல என்று கூறிய மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் சொன்னது போல கர்நாடகா நடந்து கொண்டதில்லை என்றார்.
இதன் பின்னர், திமுக., இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கொடுப்பதாகக் கூறியது. தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிய தீர்மானம் சட்டபேரவையில் நிறைவேறியது.



