
சென்னை:
தமிழகத்தின் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப் பட்டது. தமிழக நிதி அமைச்சரும் துணைமுதலருமான ஓ.பன்னீர்செல்வம் நிதி நிலைஅறிக்கையை தாக்கல் செய்து பேசினார்.
பின்னர் நிதி நிலை அறிக்கை குறித்து, செய்தியாளர்களிடம் விளக்கினார் நிதித் துறைச் செயலர் சண்முகம். அப்போது அவர், ஆண்டுதோறும் ஜிடிபியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் கடன் பெறுவதால் கடன் சுமை உயர்வதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை… ஆண்டுதோறும் ஜிடிபியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் கடன் பெறுவதால் கடன் சுமை உயர்கிறது. நிதிச்சுமையும், கடன் பற்றாக்குறையும் கட்டுக்குள் உள்ளது. தமிழக அரசின் கடன் சுமை 3.55 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.44,480 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்துக்குத்தான், மத்திய வரி வருவாய் மிகக் குறைவாகக் கிடைக்கிறது. இதனால், சிறப்பு மானிய நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால், தமிழகத்திற்கு வரி வருவாய் குறைந்துள்ளது. இழப்பை மத்திய அரசு ஓரளவு ஈடு செய்துள்ளது. தொழில்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியில் லேசான மாற்றம் தெரிகிறது. ஜிஎஸ்டி.,க்குப் பின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் முக்கியமான 10 பிரச்னைகளை மையப்படுத்தி, அதை சரிசெய்யும் வகையில்தான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது என்று கூறினார் சண்முகம்.



