2008ஆம் வருடம். மோடி குஜராத்தில் முதல்வராக தொடர்ந்து அபார வெற்றி பெற்றிருந்த நேரம். வழக்கம் போல் பொங்கல் திருநாள் அன்று துக்ளக் இதழின் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு அப்போது நரேந்திர மோடியை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார் அதன் ஆசிரியர் சோ ராமசாமி.
ஆனால், குஜராத்தில் அப்போது அயோத்திக்குச் சென்று திரும்பிய ராம பக்தர்கள் கோத்ராவில் ரயிலில் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கே மூண்டது கலவரம். இந்தக் கலவரத்தை உடனே அடக்காமல் காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுத்தார் என்றும், இதனால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றும் முதல்வராக இருந்த மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை அடுத்து நாடு முழுதும் இஸ்லாமிய அமைப்புகள் மோடி மீது வன்மத்தை வளர்த்தன. மத வெறியர் என்றும், வன்முறையாளர் என்றும் முத்திரை குத்தி, உலகளாவிய பிரசாரத்தை முன்னெடுத்தன.
அந்த அமைப்புகளுக்கு ஆதரவாக, மோடிக்கு எதிராக, தமிழகத்திலும் திராவிட இயக்கங்கள், தமிழர் பெயரில் இயங்கும் இயக்கங்கள் போராட்டத்தை நடத்தின. துக்ளக் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த மோடிககு எதிராக ஆர்ப்பாட்டங்களும், மோடி திரும்பிப் போ என்ற கோஷங்களும் எழுப்பப் பட்டன. மேலும், ஊர் முழுக்க போஸ்டர்களும் ஒட்டினார்கள்.
இது குறித்து நிகழ்ச்சியில் பேசிய சோ, இந்த அளவுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் நம் நிகழ்ச்சிக்கு விளம்பரம் சேர்த்திருக்கிறார்கள் என்றார்.
மேலும், இங்க போஸ்டர்லாம் ஒட்டிருக்காங்க..மோடி திரும்பிப் போன்னு. திரும்பித்தான் போகப் போறார். என்ன மெட்ராஸ்லயேவா இருக்கப் போறார்? என்றார்.
நேற்றைய மோடியின் பயணமும் அப்படித்தான் அமைந்தது. இந்திய ராணுவக் கண்காட்சி சென்னையில் நடைபெற்றது. அதனைத் துவக்க வந்த மோடிக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி, டிவிட்டரில் உலகளாவிய ட்ரெண்ட் ஆக்கி, கண்காட்சிக்கு உலக அளவிலான விளம்பரத்தை இந்த இயக்கங்கள் தேடித் தந்துள்ளன என்பதே உண்மை!
[videopress FH6QbVcC]