காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்களை திரையிடக்கூடாது என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. அடுத்து டிவி., பொழுது போக்கு நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பும் அதுவரை நிறுத்தப் பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை, தமிழகத்தில் ஐபிஎல்., போட்டிகள் நடத்தப் படக் கூடாது என்று, தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதற்குக் காரணமாக, இளைஞர்கள் ஐபிஎல் போட்டியால் திசை திரும்பி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்க வரமாட்டார்கள், அவர்களின் கவனம் ஒருமுகப் படுத்தப் பட வேண்டும். எனவே ஐபிஎல் கேளிக்கைக்கு இங்கே இடமில்லை என்று முழங்கினர்.
இந்தப் போராட்டங்களில் முன்னாள் சினிமா இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். இதில் வன்முறை வெடித்ததும், ஐபிஎல் போட்டிகளைக் காணச் சென்ற இளைஞர்களின் டீசர்ட்கள் கிழிக்கப் பட்டதும், கழற்றச் சொல்லி அடித்து உதைத்து அனுப்பியதுமாக வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றப் பட்டன.
இதனால் தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிவித்தனர். இந்நிலையில், இளைஞர்களை பொழுது போக்கில் ஈடுபடுத்தும் மற்றொரு கேளிக்கை அம்சமான சினிமாக்கள் புதிதாக வெளியிடப் படக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வலியுறுத்தினார்.
இந்நிலையில், காவிரிக்காக திரையுலகினர் திரண்டு வந்து அரை நாள் மௌனப் போராட்டம் நடத்தி வெறுமனே கண்கட்டு நாடகம் நடத்தினால் போதாது, புதிய படங்கள் திரையிடப் படக் கூடாது என்பது மட்டுமல்ல, திரையரங்குகளே ஒட்டு மொத்தமாக மூடப் பட வேண்டும் என்று குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
மேலும், காவிரி நீர் நம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, வீட்டுப் பெண்களுக்கும் இன்றியமையாதது. அவர்கள்தான் காவிரிக்காக போராட வேண்டும். எனவே, டிவி.,க்களில் வரும் சீரியல்களுக்கு தடை விதித்து, பொழுது போக்குகளை நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை, டிவி.,க்களில் பொழுது போக்கு சீரியல்கள், நிகழ்ச்சிகள் இடம் பெறக் கூடாது. தமிழகமே கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி இழவு வீடாகக் காட்சி அளிக்கும் போது, இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.