சென்னை: கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, முன் ஜாமீன் கோரி நாளை எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, எஸ்.வி.சேகர் தலைமறைவு ஆகி விட்டதாக செய்திகள் பரவின.
சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்த பின்னர், அவரை தேடி வருவதாகவும், அவர் வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப் படுகிறது. இதனிடையே, பெண் நிருபர்கள் சிலர், எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு விசாரணையில் தங்களை குறுக்கீடு செய்ய அனுமதிக்கக் கோரியும், முன் ஜாமீன் மனு வழங்கப் படுவதை எதிர்க்கும் தரப்பில் சேர்க்கவும் உயர் நீதிமன்றத்தை அணுகப் போவதாக செய்திகள் வெளியாகின.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், பெண் பத்திரிகையாளர் ஒருவரை பாராட்டும் விதமாக, அவரின் கன்னத்தில் லேசாகத் தட்டினார். ஆனால் அந்தப் பெண், தாம் இந்தச் செயலை விரும்பவில்லை என்றும், தாம் அருவறுப்பாக உணர்ந்ததாகவும் டிவிட்டரில் பதிவிட்டார்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரச்னையின் விபரீதத்தை உணர்ந்த ஆளுநர் தாமாகவே முன்வந்து மன்னிப்பு கோரி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும், இந்த நிகழ்வை பிரச்னை ஆக்கித் தூண்டிய திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தின.
இந்நிலையில், திமுக.,வின் தலைவர் கருணாநிதியை தாக்குவது போல், அவரது பெயரைக் குறிப்பிடாமல் ஹெச்.ராஜா ஒரு பதிவினை டிவிட்டரில் வெளியிட்டார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக.,வை சேர்ந்தவரும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி. சேகர், ஒட்டுமொத்தமாக பொத்தாம் பொதுவாக பெண் பத்திரிக்கையாளர்களை மோசமாக சித்திரிக்கும் வகையில், ஒருவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவை தன் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டதும், உடனே அதனைத் தம் பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியதுடன், தன் செயலுக்கு வருந்துவதாகவும், படிக்காமல் அதை பார்வர்ட் செய்துவிட்டதாகவும் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், பிரச்னையை இத்துடன் விடுவதற்கு பத்திரிகையாளர்கள் தயாரில்லை. அவர் இல்லத்தின் முன் சென்று கல்வீசித் தாக்குதல் தொடுத்தனர். இதனிடையே பத்திரிகையாளர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதை அடுத்து, இழிவான கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட நடிகர் எஸ்.வி.சேகர் மீது பெண் பத்திரிகையாளர் புகார் அளித்தனர். சென்னை மட்டுமின்றி, பல்வேறு இடங்களிலும் எஸ்.வி.சேகர் மீது புகார் அளிக்கப் பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் பிரிவில் வரக் கூடிய பேஸ்புக் பகிரல் கருத்துக்காக, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் எஸ்வி சேகர் மீது பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய எஸ்.வி.சேகர், இந்த விவகாரம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விடியோ ஒன்றைப் பதிவிட்டு, நடந்த தவறு குறித்து விளக்கம் கூறி, மீண்டும் மன்னிப்பு கேட்டிருந்தார். அதில் அவர், எங்கள் குடும்பத்தில் பெண்களை மதிக்கும் பண்பு உண்டு. வருத்தம் தெரிவிக்க இதனை பதியவில்லை, மன்னிப்பு கேட்கவே பேசுகிறேன். பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இருப்பினும், போலீஸார் எஸ்.வி.சேகரை கைது செய்யும் முயற்சியில் இருப்பதாகக் கூறப் படுகிறது. வழக்கு பதிவு செய்யப் பட்ட நிலையில், தன்னை கைது செய்யக் கூடும் என்ற சூழலில், எஸ்.வி.சேகர் நாளை முன் ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று கூறியும், பிரதமர் மோடியை மோசமாக விமர்சித்தும், ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க வந்த ரசிகர்கள், ரசிகைகளை, மேல் சட்டையைக் கழற்றச் சொல்லி ஆபாசமாக சித்திரித்துப் பேசியும், காவல்ர்களை கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியும் வன்முறையில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தும், எந்த விதமான கைது நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மேலும், சீமானைக் கைது செய்யக் கூடாது என்று போலீஸாரை மிரட்டி திரையுலகின் சில ஓய்வு பெற்ற இயக்குனர்கள் போராட்டங்களை நடத்தியதும், போலீஸார் அவர்களுக்கு பயந்து, கைது நடவடிக்கையைக் கைவிட்டு, அவர்களுடன் சமாதானப் பேச்சுகளை நடத்தினர்.
தேசத் துரோக பிரிவினைக் கருத்துகளை ஊடகங்களில் பேசி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடிய போலீஸார், எஸ்.வி.சேகரைக் கைது செய்து, பலிகடா ஆக்க பாடுபட்டுவருவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன. மேலும், ஈ.வே.ரா விவகாரத்தில் பெரியார் மண் என்பது குறித்து கேலி பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்து, வாயில் லத்தியைப் போட்டுத் திணித்து ஆட்டுவேன் என்று, அந்தப் பகுதி காவலர் ஒருவர் வெறியுடன் சொன்னதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப் பட்டு வருகின்றன. இந்நிலையில், போலீஸார் கைது செய்தால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்று கூறி எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யக் கூடும் என்று தெரிகிறது.
கைத௠செயà¯à®¯ வேனà¯à®Ÿà¯à®®à¯