மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் உதவிப் பேராசிரியர் முருகன் சிபிசிஐடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப் பட்டு, அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்ட நிர்மலா தேவியிடம், நீதி மன்ற அனுமதியுடன் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் அவர் பல தகவல்களைக் கூறியுள்ளார். இதை அடுத்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்ட போலீஸார், வீட்டில் இருந்து கணினி ஹார்ட் டிரைவ் உள்பட, நிர்மலா தேவி முறைகேடாக சேர்த்த சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், பத்திரங்களை எடுத்துச் சென்றனர். இதனிடையே தன்னுடன் தொடர்புடையவர்களாக பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன் ஆகியோரை நிர்மலா தேவி குறிப்பிட்டிருந்தார்.
இவர்கள் இருவர் தூண்டுதலின் பேரில்தான் மாணவிகளிடம் தான் பேசியதாக நிர்மலாதேவி சிபிசிஐடி விசாரணையில் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அவ்விருவரும் தலைமறைவாகினர். இதை அடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டிவந்தனர். இதை அடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்வதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதற்கு இடையே ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியைத் தேடி அவரது சொந்தஊரான திருச்சுழி அருகில் உள்ள நாடாகுளம் கிராமத்திற்குச் சென்ற சிபிசிஐடி போலீஸார், பலரிடம் அவர் குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் திங்கள் கிழமை இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் கையெழுத்து போடுவதற்காக வந்த உதவிப் பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீஸாஅர் கைது செய்தனர்.