திருநெல்வேலி: திருநெல்வேலியில் அருள்பாலிக்கும் நெல்லையப்பர் – காந்திமதியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்துக்குப் பின்னர் 14 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ரூ.4.92 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா, கடந்த 20 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி மாலை வரை 5 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இதன் பின்னர் வெள்ளிக்கிழமை காலை ஆறாம் கால யாக சாலை பூஜை, பரிவார மூர்த்திகள் யாக சாலை பூர்ணாஹுதி, நாடி சந்தானம், ஸ்பர்ஸ ஆஹுதி, யாத்ரா தானம் ஆகியவை நடைபெற்றன. பின்னர் நெல்லையப்பர், காந்திமதியம்மன், வேணுவனநாதர், அனைத்து தேவ தேவியர்க்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ரா.செல்வம் பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி மகா தீபாராதனை செய்தனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு வைபவத்தின் போது, நெல்லையப்பா போற்றி, காந்திமதியம்மா போற்றி, நமச்சிவாய வாழ்க முழக்கங்கள் விண்ணதிர்ந்தன. புனித கும்ப நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெற்ற போது கருடன் வட்டமிட்டது. அதைக் கண்டு பக்தர்கள் பக்திப் பரவசத்தில் ஹர ஹர கோஷமெழுப்பினர்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை, மகாஅபிஷேகம் நடத்தப்பட்டு, சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் போது திருமுறையில் பாடப் பெற்ற இசைக் கருவிகளான உடல், தாளம், திருச்சங்கு, சின்னம், எக்காளம், கொம்பு, துத்திரி உள்ளிட்டவை இசைக்கப்பட்டன.
கும்பாபிஷேகத்துக்காக, பாதுகாப்பு பணியில் 1,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண வசதியாக 5 இடங்களில் பிரம்மாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
சர்ச்சையைக் கிளப்பிய விஜிலா சத்யானந்த்:
நெல்லையப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதே பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் தான். முதலில் அதிகாலை வைத்திருந்த முஹூர்த்த நேரம் பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் 10 25 மணிக்குள் என்று மாற்றப் பட்டது. கும்பாபிஷேக தேதி சரியில்லை என்று பலரும் தெரிவித்து, விடாப்பிடியாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த இரண்டு அமைச்சர்கள் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சொந்த ஊரில் தேரோட்டம் காணச் சென்றதால் கால தாமதம் ஏற்பட்டது..
இந்து ஆகம விதிப்படி கோவில் மூலவர் சன்னிதி மேல் பெண்கள் ஏறக் கூடாது.. அரசியல் பிரமுகர்கள் ஆட்சித்தலைவர் அனைவரும் கீழே கூடி இருக்க மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் இருவரும் மூலவர் சந்நிதி மேல் பகுதியில் ஏறினர். இதைக் கண்டு, இந்து அமைப்பைச் சேர்ந்த ஒரு பிரமுகர் கூச்சலிட்டார். இதைக் கேட்டு அவர்கள் கீழே இறங்கினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..
இதை அடுத்து இந்து அமைப்புகள் விஜிலா சத்யானந்த் விவகாரத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளன. கிறிஸ்தவர் எப்படி இந்துக்கள் ஆகம விதியை மீறி செயல்படலாம் என போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.