சென்னை: 11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தீர்ப்பை விமர்சித்த தங்க.தமிழ்ச் செல்வன் மீது நடவடிக்கை கோரி முறையிட்டதற்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று பதில் அளித்தார் நீதிபதி.
தமிழக துணை முதல்வர் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களைத் தெரிவித்தன. டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வனும் இந்தத் தீர்ப்பு குறித்து விமர்சித்தபோது, விலை கொடுத்து வாங்கப் பட்ட தீர்ப்பு என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதை அடுத்து, இன்று காலை தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி முன்பு தங்க தமிழ்ச்செல்வன் விமர்சனம் குறித்து வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் முறையிட்டார். இத்தகைய விமர்சனங்கள் நீதித்துறை மீது மக்களிடம் ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கும் என்றும், இதுபோன்ற விமர்சனங்கள் தெரிவிப்பதை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் மக்களிடம் நம்பிக்கை போய்விடும் என்றும் கூறினார். தொடர்ந்து, இத்தகைய விமர்சனங்களை தெரிவித்த தங்க தமிழ்ச்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் நீதிபதியிடம் முறையிட்டார்.
சூரிய பிரகாசத்தின் முறையீட்டுக்கு இவ்வாறு பதிலளித்தார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி. “இப்படிப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளிக்கும் போது பலதரப்பட்ட விமர்சனங்கள் வரும் என்பது நாங்கள் அறிந்த ஒன்றுதான். நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு, மனசாட்சிக்கு விரோதமாக வழங்கப்படவில்லை என்பது கடவுளுக்கு தெரியும். மனசாட்சிப்படி தீர்ப்பு அளிப்பதால் ஆண்டவனுக்கு மட்டுமே பதில்சொல்ல கடமைப்பட்டுள்ளோம். தீர்ப்பு குறித்த எவ்வித விமர்சனங்களுக்கும் நாங்கள் கவலைப்படவில்லை…
தமிழகம் அதிகம் படித்தவர்கள் கொண்ட மாநிலமாக விளங்கி வரும் சூழ்நிலையிலேயே அரசியல் ஆதாயத்திற்காக ஒருசிலர் நீதிமன்ற உத்தரவுகளை விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்வதையோ, நடவடிக்கை எடுப்பதையோ நாங்கள் விரும்பவில்லை. வேண்டுமெனில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தால் நீதிமன்ற விடுமுறை நாட்களுக்கு பிறகு ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார் அவர்.