சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மெரினாவில் போராட்டம் நடத்த தடை கோரி தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவில், ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா. ஒருநாள் மட்டும் மெரினாவில் அமைதிப் போராட்டம் நடத்த அனுமதிக்கலாம் என்றும், பேச்சுரிமை, எழுத்துரிமையை மதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் நீதிபதி ராஜா.
இந்நிலையில் இதை எதிர்த்து தமிழக உள்துறை செயலர், காவல்துறை இயக்குநர், தமிழக அரசு ஆகியோர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மெரினாவில் போராட்டங்களுக்கு அனுமதிப்பதில்லை என்பது கொள்கை முடிவு என்று ஏற்கெனவே தமிழக அரசு சார்பில் தெரிவித்திருந்தும், அய்யாக்கண்ணு போராட்டம் நடத்த ஒரு நாள் மட்டுமாவது தமிழக அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.




