அதிமுக., அம்மா அணி மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனைக் கூறியவர், சசிகலாவின் சகோதரர் வி.திவாகரன். தனக்காக ஒரு புதிய அமைப்பைத் தொடங்குவதற்கு முன்னர் வரை அதிமுக.,வை மீட்பேன் என்று சொல்லி, அதிமுக., அம்மா அணி என சட்டப்போராட்டம் நடத்தி வந்த டிடிவி தினகரன், அம்மா அணியை மறந்தவிட்டதால், அதனை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் திவாகரன்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்மா அணியின் புதிய அலுவலகத்தை நேற்று திறந்துவைத்தார் திவாகரன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொது் செயலாளர் தினகரனுக்கும், வி.கே.சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், இப்போது மீண்டும் அம்மா அணி உருவாகியுள்ளது.
துவக்கத்தில் இருந்தே, அமமுக.,வை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், தொடர்ந்து அம்மா அணியிலேயே தாம் இருப்பதாகவும் திவாகரன் தெரிவித்திருந்தார். இதை அடுத்து, கேட்பாரற்றுக் கிடந்த அம்மா அணிக்கு, மன்னார்குடியில் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து அதற்கு உயிரூட்டியுள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “அம்மா அணி தினகரனால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பை தற்போது உயிர்ப்பிக்கும் விதமாக புதிய அலுவலகம் திறக்கப் பட்டுள்ளது. இளைஞர்களை அதிகம் சேர்த்து, அறிவியல் பூர்வமாக சிந்தித்து உயர்ந்த பட்ச அமைப்பாக இனி இந்த அமைப்பு செயல்படும்.
சென்னையில் தலைமை அலுவலகம் திறக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைப்படி, சசிகலாவின் வழிகாட்டுதலோடு நான் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவேன்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து நான் அதிமுகவில் பணியாற்றியுள்ளேன். ஜெயலலிதாவை பொதுச் செயலாளராக்கியதில் எனக்கு முழு பங்குண்டு. டிடிவி தினகரனின் செயல்பாடுகள் அனைத்தும் பொய்யும், புரட்டுமாக மாயையை ஏற்படுத்துவதுபோல உள்ளது. குடும்ப அரசியல் கூடாது என தினகரன் கூறுகிறார். குடும்பம் இல்லாமல் அவர் எங்கிருந்து வந்தார். சசிகலாவின் சகோதரி மகன் என்பதாலேயே அவருக்கு அப்போது எம்பி பதவி கிடைத்தது.
சில காலம் அரசியலில் இருந்தே காணாமல் போய்விட்டார். தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவைப் பிடித்து துணைப் பொதுச் செயலாளர் பதவி வாங்கிக் கொண்டார். தினகரன் தனது மனைவி, மைத்துனர் வெங்டேசனின் வழிகாட்டுதலிலேயே கட்சியை நடத்தி வருகிறார். இதனால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களை அரவணைப்பதற்காகவே இந்த அமைப்புக்கு உயிர்கொடுக்க இந்த அலுவலகத்தை திறந்துள்ளோம்… என்று கூறினார்.
அவர் கூறியபடி, தினகரனின் கட்சியில் இடம் இல்லாதவர்களுக்கு திவாகரனின் அமைப்பில் இடம் கிடைக்கலாம். அதிமுக.,வை மீட்பேன், இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் என்றெல்லாம் கூறி வந்த தினகரன், அதனை செயல்படுத்த இயலாத சூழலில் அதே கொள்கைகளை திவாகரனும் கையில்.எடுக்கலாம். குறிப்பாக, புதிய அமைப்பில் பதவிச் சண்டை அதிகரித்த காரணத்தாலேயே இந்தப் பிரிவினைகள் என்று அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்த அம்மா அணியின் செய்தி தொடர்பாளர்களாக மன்னார்குடி வி.கே.இளந்தமிழன், திருச்சி அல்லூர் சீனிவாசன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி கே.கோவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக திவாகரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
அம்மா அணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட திவாகரன், தினகரனுடனான மோதல் முற்றிய நிலையிலேயே, இந்த முடிவை எடுத்துள்ளார். இவர் ஒருங்கிணைப்பாளர் என்பதால், அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவாகவே இருக்கக் கூடும். காரணம், தினகரன் தன்னை து.பொ.செ., என்றே அறிவித்துக் கொண்டார். தற்போது திவாகரன் தன்னை தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆக்கிக் கொண்டுள்ளார். தொடர்ந்து, அம்மா அணிக்கு விரைவில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார் திவாகரன்.
முன்னதாக, திவாகரனுக்கு ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மனநலமும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தான் கருதுவதாக டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார். சென்னை ஆர்.கே.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திவாகரனை தூண்டிவிடுவது யார் என்பது விரைவில் தெரியவரும் என்றார். மேலும், திவாகரன் பற்றிய கேள்வியெல்லாம் கேட்டு, என் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
அதிமுக.,வையும் ஆட்சியையும் தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டுவர எவ்வளவோ முயற்சிகளைச் செய்த சசிகலா குடும்பம், இப்போது அனைத்தையும் இழந்து சிதறிப்போய்க் கிடக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் பழிவாங்குகின்ற ஜெயலலிதாவின் ஆன்மாதான் என்று இன்றளவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலை மீட்பு, அதிமுக., கட்சி அலுவலகம் மீட்பு, அதிமுக மீட்பு என்றெல்லாம் இயங்கிய சசிகலா குடும்பம், இப்போது சிதறுண்டு சின்னாபின்னமாகியுள்ளது.