சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டையை நோக்கி பேரணி செல்ல வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வருகின்றனர். கைது செய்யப் பட்டவர்கள், அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். பெண்களை இன்று மதியத்துக்கு மேல் விடுவிப்பதாகக் கூறியுள்ள போலீஸார் அவர்களுக்கு காலையில் டீயும் பன்னும் கொடுத்து மண்டபங்களில் தங்க வைத்துள்ளதாக ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் கூறினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்; வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல்; 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மெரினாவில் சென்னை பல்கலைக்கழகம் அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சென்னை வாலாஜா சாலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சென்னை அருகே வண்டலூரில் வாகன் சோதனையின்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப் பட்டனர். அண்ணாசாலை, சேப்பாக்கம், கடற்கரை சாலைகளில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கோட்டை நோக்கி வரும் சாலைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே கோட்டையை நோக்கி செல்லும் மெரினா சாலை, ராஜாஜி சாலைகளில் அனுமதிக்கப்பட்டன.
கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்துக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்வதற்காக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை முதல் ரயில்கள் மூலம் வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அடையாளம் கண்டு கைது செய்த போலீசார், சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவாக வந்தவர்களின் அடையாள அட்டையை வாங்கியும் சோதனை மேற்கொண்டனர். அவ்வாறு வந்தவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாகக் கைது செய்த போலீசார், அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் 100க்கும் மேற்பட்ட போலீசார், தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையை நோக்கி தனியார் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளை தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கின்றனர்.