திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் கோயில் முன்னாள் உதவி ஆணையர், நகை மதிப்பீட்டாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழனி முருகன் கோவிலில், புதிதாக ஐம்பொன்னாலான சிலை செய்ய வேண்டும் என்று கூறி, கடந்த 2004 ஆம் ஆண்டு முருகன் சிலை செய்யப்பட்டது. இதில், உலோகக் கலப்பு, தங்கம் கலப்பு ஆகியவற்றில் மோசடி செய்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதை அடுத்து, இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அப்போதைய பழனி கோவில் இணை ஆணையர் கேகே ராஜா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, சிலைத் தடுப்பு போலீசார் கடந்த இரு நாட்களாக பழனியில் முகாமிட்டு, உலோகவியல் பேராசிரியர் முருகையன் தலைமையில் முருகன் சிலை மற்றும் கோவிலில் உள்ள மற்ற ஐம்பொன் சிலைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், ஐம்பொன் சிலை முறைகேட்டில் உதவி செய்ததாக அப்போதைய பழனி கோவில் உதவி ஆணையர் புகழேந்தி, தலைமை நகை மதிப்பீட்டாளர் தெய்வேந்திரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.




