சென்னை: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு நீதிபதி சத்யநாராயணா ஒத்தி வைத்தார்.
ஜூலை 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தினமும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சத்யநாராயணா தெரிவித்தார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து அவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.




