சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தெரிவிக்கப் பட்டுள்ள சொத்துக் குவிப்பு புகாரில், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பக் கட்ட விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
ஓபிஎஸ்., மற்றும் அவரது குடும்பத்தினர் அளவுக்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாகவும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, திமுக எம்.பி., ஆர்எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 3 மாதங்களாக ஏன் விசாரணை நடத்தவில்லை என்று கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், சேகர் ரெட்டி டைரியில் ஓ.பி.எஸ். பெயர் இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி மனுவில் கூறப்பட்டுள்ளதால், இந்த வழக்கை ஏன் சி.பி.ஐ.க்கு மாற்றக்கூடாது என்று கேட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி மனு மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்தப் புகார் மனு குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த 18ஆம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆரம்ப கட்ட விசாரணை முடிவடைந்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஒரு வாரத்தில் விசாரணையை முடித்து, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.




