சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.
இதனிடையே ராஜாஜி அரங்கில் தொண்டர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். நெரிசல் காரணமாக தொண்டர்கள் 25 பேர் காயமுற்றனர்.
இதனிடையே மீண்டும் ராஜாஜி அரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இதில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த செண்பகம்(60), மற்றும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் உயிரிழந்தார். 8 பேர் ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
முன்னதாக, கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளித்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.இதை அடுத்து தொண்டர்களிடம் உற்சாகம் கூடியது. ராஜாஜி ஹாலில் கூடி இருந்த தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசிய போது, நாம் ஆழ்ந்த சோகத்தில் உள்ளோம். கருணாநிதி விட்டுக் கொடுக்காத போராளி. போராட்ட குணம் கொண்டவர். இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர்.
மறைந்த பிறகும் இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்றுள்ளார். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். முதல்வரை சந்தித்து இடம் ஒதுக்க கோரியும் அவர் செவி சாய்க்க வில்லை. ஐகோர்ட் நமக்கு நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளது. கருணாநிதியின் உணர்வை நிறைவேற்றியுள்ளேன்.
தொண்டர்கள் படியேறி மேலே வரும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். தயவு செய்து கலவரத்திற்கு இடம் தர வேண்டாம். போலீசார் உரிய ஒத்துழைப்பு தராவிட்டாலும், நாம் அமைதி காக்க வேண்டும். உங்களின் சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன். தொண்டர்கள் கலைந்து செல்லுங்கள். அமைதியாகக் கலைந்து சென்றால்தான், இறுதி ஊர்வலத்தைத் துவக்க முடியும். இதற்கு தொண்டர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்… என்று கூறினார் ஸ்டாலின்.




