தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் அன்று தெப்ப உற்சவ திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.
கடந்த 3 ஆண்டுகளாக தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்பத் திருவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஆவணி தெப்பத் திருவிழா நேற்று நடந்தது. காலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. பின்னர் அம்மையப்பர் தெப்பத் திருவிழா மண்டபத்திற்கு எழுந்தருளினர். மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
இதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்கு அம்மையப்பர் எழுந்தருளினர். இரவு 7 மணிக்கு தெப்பக்காட்சி துவங்கியது. மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் அம்மையப்பர் தெப்பத்தை 11 முறை சுற்றி வந்தனர். தெப்பத்தை சுற்றி திரளான பொதுமக்கள் நின்று தெப்பக்காட்சியை கண்டு தரிசனம் செய்தனர். இரவு ரிஷப வாகன காட்சியும், வீதி உலாவும் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்த கொண்டனர்.




