
கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே வலது புற பகுதியில் மீண்டும் ரயில்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் இலுப்பையூர் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் இருந்து மேற்கூரை பெயர்ந்து ரயில்களுக்கு செல்லக்கூடிய மின்சார கம்பியின் மேல் பட்டது. இதனால் கம்பி அறுந்து, மின் இணைப்பு துண்டிக்கப் பட்டது.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் சுமார் 7 மணி நேரம் தாமதமாகச் சென்றன. நேற்று நள்ளிரவு பணிகள் தற்காலிகமாக சரி செய்யப்பட்ட நிலையில் ரயில்கள் இயக்கப்பட்டன.
இதனிடையே இன்று காலை சென்னையிலிருந்து அனந்தபுரி நோக்கிச் சென்ற விரைவு ரயில் வேலாயுதபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரயில்களுக்கு செல்லக்கூடிய மின் கம்பி துண்டிக்கப் பட்டது. இதனால் மின் விநியோக பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. மின்சாரம் இல்லாத காரணத்தினால் மின்சார ரயில்கள் அனைத்தும் இயக்கப்படாமல் உள்ளன.



