சென்னை: மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற அறிவிப்புடன் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் வகையில், 2 வாரத்தில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ராமதிலகம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையிலான சுற்றறிக்கையை அக்டோபர் 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யா விட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தமிழக அரசு எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தனர்.
அப்போது ஆஜரான குற்றவியல் அரசு வழக்கறிஞர், சுற்றறிக்கை தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே சட்டத்தில் உள்ள விதியை அமல் படுத்துவதற்கு எதற்காக நீண்ட நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பினர்.
மேலும், குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதும் குற்றம்தான் என்றும், உடந்தையாக இருப்பவர்களை தண்டிக்காமல் இருக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை துறைரீதியாக தண்டிப்பதுடன், அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கவும் வேண்டும் என்றும், அதை சுற்றறிக்கையில் தெரிவிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்,




