தென்காசி அம்மன் சன்னதி எதிரே அமைந்துள்ள ஜும்ஆ தொழுகை பள்ளிவாசலுக்குள்பட்ட பகுதியை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் வழக்கறிஞர் ஆணையர் குழு இன்று 2 வது முறையாக ஆய்வு மேற்கொண்டது.
நெல்லை மாவட்டம், தென்காசியில் உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவில் அருகில் அம்மன் சன்னதியில் ஜும்ஆ தொழுகை பள்ளிவாசலின் மேற்கூரை சேதமடைந்திருப்பதாகவும் அதை பராமரிக்கவும் அனுமதி கோரி கடந்த 2014ஆம்ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காஜாமைதீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதே போல இந்தப் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதி இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் என்று கூறியும், கட்டடத்தை பராமரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நகராட்சி சார்பிலும், குமார், சோலை கண்ணன் ஆகியோர் சார்பிலும் மனு தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. கோவில் மற்றும் தொழுகை பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டு சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.
இந்நிலையில் பஜார் பள்ளிவாசல் நிலத்தை அளவீடு செய்து தருமாறு, பள்ளிவாசல் கமிட்டி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு, இடம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைகிளை வழக்கறிஞர்கள் நிரஞ்சன் எஸ்.குமார், ரகுவரன் கோபாலன் ஆகியோர் அடங்கிய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டது.
இக் குழுவினர் தென்காசி பஜார் பள்ளிவாசலில் கடந்த 09.12.17 அன்று சம்மந்தப்பட்ட இடத்தை மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் , வழக்கறிஞர் ஆணையர்களாக நிரஞ்சன், ரகுவரன் கோபாலன், கார்த்திக், காஜா மொகைதீன், முனிசிபல் வழக்கறிஞர் அதிவீரபாண்டியன், ராஜா மற்றும் தலைமை சர்வேயர் ஆனந்த் சேகர், சர்வேயர் சரவணன் ஆகியோர் அடங்கிய 10 பேர் குழு மற்றும் கோவில் நிர்வாகதினர் சம்பந்தபட்ட இடத்தை அளந்து குறித்து கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் ஆணையர்களான
நிரஞ்சன், ரகுவரன் கோபாலன் ஆகியோர் தலைமையிலான குழு 2 வது கட்டமாக இன்று மதியம் தென்காசி வந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த கட்டடத்தின் அளவுகள் குறித்த அறிக்கை மற்றும் தன்மை குறித்தும் ஆய்வு செய்து அவர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர்.
இந்த ஆய்வை முன்னிட்டு தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், பஜார் பள்ளிவாசல் பகுதியில் போலீஸ் டி.எஸ்.பி.மணிகண்டன் தலைமையில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மேற்பார்வையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.




