கோவிலை பொது இடம் என்றும், இறைவனை ஜடப்பொருள் என்றும் குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள இந்த துரதிருஷ்டவசமான தீர்ப்பால் கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள மனவேதனையையும், துயரத்தையும் கருத்தில் கொண்டு ஐயப்ப சேவா சமாஜம் ஒத்த கருத்துடைய இந்து அமைப்புகளுடன் இணைந்து நீதிக்காக சட்டப் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது.” என்று சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய செயலர் என்.ராஜன் புது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில்,
10 முதல் 50 வயது வரையிலுள்ள பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழையக்கூடாது என்ற கோவில் கட்டுப்பாட்டை எதிர்த்து “YOUNG LAWYERS ASSOCIATION” என்ற அமைப்பால் தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டெம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் கோடிக்கணக்கான இந்துக்கள் குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் மிகவும் மனவருத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
அதே நேரம், அமர்வின் ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா அவர்கள் இந்துக்களின் உணர்வுகளையும், கோவிலின் புனிதத் தன்மையையும் உணர்ந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பது கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் இதயத்தை தொட்டுவிட்டது. பல்வேறு காரணங்களால் இந்த தீர்ப்பு ;மிகவும் துரதிருஷ்டவசமானது.
கோவில் என்பது பொது இடம் என்றும், இன்றும் சாநித்தியமாக இருப்பதாக கருதி இந்துக்கள் வணங்கும் கடவுளை உயிரற்ற ஜடப்பொருள் என்றும் சித்தரித்து அதனால், அந்த கடவுளுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எந்த அடிப்படை உரிமைகளும் கிடையாது என்பதான விவரிப்புகளுக்கு, சாதி மதம் இனம், மொழி, பாலினம் ஆகிய வேறுபாடுகளை கடந்து கேரளாவிலிருந்து மட்டுமல்லாது நாடு முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த தீர்ப்புக்கும் தங்களுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத சிறிய அளவிலான சிறுபான்மையினரின் ஆதரவு இந்த தீர்ப்புக்கு கிடைத்து வருவது நாட்டில் அமைதியையும், சகிப்புத்தன்மையையும் சீர்குலைத்து பிரிவினையையும், பூசல்களையும் தோற்றுவிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.
மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் அதேவேளையில், இந்த தீர்ப்பு மிகவும் துரதிருஷ்டவசமானது எனக்கூறி கீழ் காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். · தீர்ப்பை மறுபரிசீலனை செய்வது இறுதி ஆணை வரும் வரை, தற்போதைய தீர்ப்பை நடைமுறைபடுத்தாமல் நிறுத்தி வைப்பது · மிகவும் முக்கியமான இந்த விஷயத்தில் சிறப்பு கமிஷன் அமைத்து ஆராய்வது…
கோவிலை பொது இடம் என்றும், இறைவனை ஜடப்பொருள் என்றும் குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள இந்த துரதிருஷ்டவசமான தீர்ப்பால் கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள மனவேதனையையும், துயரத்தையும் கருத்தில் கொண்டு ஐயப்ப சேவா சமாஜம் ஒத்தக்கருத்துடைய இந்து அமைப்புகளுடன் இணைந்து நீதிக்காக சட்டப்போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது.,., என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




