பொள்ளாச்சியில் பெற்றோரை நம்பவைத்து உடனிருந்து உதவுவது போல் தங்கியிருந்து, பிறந்த குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணை 10 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.
கோவை மாவட்டம் காளியாபுரம் நரி கல்பதியை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி தேவி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது பெண் ஒருவர் வந்து பேசி அவர்களுடன் பழகியுள்ளார். சிறிது பழகியதும், “எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை, உங்களுடனே இருக்க அனுமதியுங்கள்…” என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் மனமிரங்கிய பாலன் தம்பதி, அந்தப் பெண்ணை அவர்களுடன் தங்க அனுமதித்துள்ளனர்.
இதை அடுத்து அந்தப் பெண்ணும், தேவிக்கு பிரசவம் முடியும்வரை கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். பிரசவம் முடிந்த பின்னர், தாயும் சேயும் வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவர்கள் அனுமதி அளித்த நிலையில், மருந்துகள் வாங்குவதற்காக பாலன் வெளியே சென்றுள்ளார்.
அப்போது பாலனுடன் தன் கையில் குழந்தையையும் வைத்துக் கொண்டு வெளியே வந்த அந்தப் பெண்மணி, அப்படியே குழந்தையுடன் தப்பிச் சென்றுள்ளார்.
குழந்தை காணாமல் போனதும், அதை அந்தப் பெண்ணே தூக்கிச் சென்றிருப்பதையும் அறிந்த பாலன் தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக புகார் அளிக்கவே, மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தையை தூக்கிக் கொண்டு பாலன் உடன் செல்லும் அப்பெண், குழந்தையுடன் வெளியே சென்றுவிடுவது தெரிந்தது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரித்ததில், அந்தப் பெண் குறித்த தகவல் தெரிய வந்தது. ஆண் குழந்தை பிறந்து ஆறு நாளான நிலையில், போலீஸாரின் தீவிர விசாரணையில், அந்தப் பெண் சிக்கினார். உடுமலை குறிச்சிக்கோட்டை பகுதியில் குழந்தையுடன் வீட்டில் இருந்த அந்தப் பெண்ணை தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்தனர். கடத்திய பெண்னை கைது செய்து குழந்தையை மீட்டனர்.
குழந்தை கடத்தப்பட்ட பத்து மணி நேரத்தில் குழந்தையை மீட்ட பொள்ளாச்சி போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினர்.




