சென்னையில் ரோட்டில் கிடந்த ரூபாய் நோட்டு கட்டுகளை போலீசிடம் ஒப்படைத்த இளைஞா்கள்!

சென்னை தரமணி அருகேயுள்ள இந்திராகாந்தி தெருவில் வசிப்பவர் செந்தில். இவரது நண்பர் தினேஷ். இவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் ஆவர். இருவரும் தரமணியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். ஒரு வேலைநிமித்தமாக பெங்களூரு சென்ற செந்தில் கோயம்பேடு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் வேளச்சேரி விஜயநகரத்திற்கு வந்து நண்பன் தினேசை வந்து அழைத்து போக சொல்லியுள்ளார்.
இதனையடுத்து டூ வீலரில் விஜயநகரம் சென்ற தினேஷ், செந்திலை அழைத்து கொண்டு தரமணி திரும்பி கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் ஓரத்தில் ரூ.500 நோட்டு கட்டு சிதறி கிடந்துள்ளது. இதனை கண்ட இருவரும் அருகில் சென்று அந்த நோட்டுக்கட்டை எடுத்தனர். அந்த ரூ.500 நோட்டு கட்டில் ரூ.89,500 மதிப்புடைய 179 ஐநூறு ரூபாய் தாள்கள் இருந்துள்ளன. இதனை கண்டு அதிர்ந்த அவர்கள் உடனடியாக ரூபாய் நோட்டுகளை காவல்நிலையம் சென்று ஒப்படைத்தனர்.
இதனையடுத்து போலீசார் அந்த ரூபாய் நோட்டுகளை பிரித்து சோதனை செய்தபோது, அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து தரமணி பகுதியில் கள்ள நோட்டுகளை வீசிச் சென்றது யார், வேளச்சேரி தரமணி பகுதியில் கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதா? என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் கள்ள நோட்டுகள் என்று தெரியாமல் சாலையில் கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை நேர்மையாக போலீஸிடம் ஒப்படைத்த இளைஞர்களை காவல்துறையினர் பாராட்டி அனுப்பி வைத்தனர்.



