
திருநங்கையாக மாற பெற்றோர் எதிர்ப்பு: பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்…!
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகன் பார்த்தசாரதி (வயது 21). பி.சி.ஏ. பட்டபடிப்பு படித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இவர், பெண்களுக்கு உண்டான நடை, உடை பாவனையில் இருந்துள்ளார்.
இதனை கவனித்த பார்த்தசாரதியின் பெற்றோர் மகனை கண்டித்து அறிவுரை வழங்கினா். ஆனாலும் பார்த்தசாரதியால் தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஆனால் திருநங்கையாக மாற அவரது பெற்றோர் தொடா்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனா். .
இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பார்த்தசாரதி, தனது வீட்டை விட்டு வெளியேறி மணலி பெரியதோப்பில் உள்ள திருநங்கைகள் 2 பேருடன் தங்கிவிட்டார்.
இதனையடுத்து தங்கள் மகன் பார்த்தசாரதி மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். பார்த்தசாரதியின் நண்பர்களிடம் அவரை பற்றி விசாரித்தனர்.
தன்னை பெற்றோர் தன்னை தேடுவதை தெரிந்து கொண்ட பார்த்தசாரதி, தன்னை திருநங்கையாக மாற விடாமல் பெற்றோர் அழைத்துச் சென்று விடுவார்களோ? என்று பயந்தார். நேற்று முன்தினம் இரவு அவருடன் தங்கி இருந்த திருநங்கைகள் இருவரும் தூங்கச்சென்ற பிறகு பார்த்தசாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணலி போலீசார், பார்த்தசாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



